தமிழ் மொழியை முடிந்த வரை குழந்தைகளுக்கு புரியாத, தேவையில்லாத - மற்ற மொழிகளுடன் ஒப்பிடுகையில் - முக்கியமில்லாத மொழியாக அறிமுகப்படுத்தி விட்டோம். பள்ளியில் சேர்ந்த பிறகு காலம் செல்ல செல்ல, தமிழுக்கும் குழந்தைக்குமிடையே உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டு போவதற்கு, முதலில் நாம்தான், நம் வீட்டில் தான் தவறை தொடங்குகிறோம்.
வீட்டில் தமிழில் பேசினாலும் வெளியில் சென்றுவிட்டால் ஆங்கிலத்தில் பேசுவது கௌரவமாக நாம் கருதும்வரை, நம் குழந்தைகளும் அவ்வாறுதானே வளரும்.
இதைப்பற்றி எவ்வளவோ எழுதலாம். இருந்தாலும் அவ்வப்பொழுது சிறிது சிறிதாக எழுத எண்ணம். இன்று, தமிழ் பாடத்திட்டத்தில் நான் பார்த்த ஒன்றை எழுத விரும்புகிறேன்.
தமிழ் பாடத்தில் மனப்பாடப் பகுதி என்று ஒன்று இருக்கும். அதை கணிதத்தோடு ஒப்பிடுவார்கள்; அதாவது சரியாக, அட்சரம் பிசறாமல் எழுதி விட்டால் முழு மதிப்பெண் கிடைத்துவிடும். குழந்தைகள் பள்ளிக்கு செல்வதே மதிப்பெண் வாங்குவதற்குத்தானே!
சிறு வயதில் எளிதான திருக்குறள்கள் மனப்பாடப் பகுதியில் வரும். வகுப்பு மேலே செல்ல செல்ல கம்பராமாயணமோ, சிலப்பதிகாரமோ வந்து, பாடத்தை உருப்போடுவதற்கு மனதை பாடாய்படுத்திவிடும். இது எதனால் என்று யோசித்த போது, பொருள் புரியாமல் உருப்போடுவதுதான் அதற்கு காரணம் என்ற முடிவுக்கு வந்தேன்.
அப்போதுதான் பாடத்திட்டத்தின் ஒரு குறை தெரிந்தது. நான் ஒன்றும் தமிழ் அறிஞனல்ல. ஏதோ, எனக்கு மனதில் பட்டதை சொல்கிறேன்.
எளிய உதாரணத்தின் மூலம் இதை விளக்குகிறேன். எனக்கு பிடித்த ஒரு குறள்:
"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்."
மேற்படி குறளின் பொருள் எளிதுதான். அதனால் அதை விட்டுவிடுவோம்.
இலக்கணத்தை முதலில் பார்ப்போம். இது வெண்பா வகையை (குறள் வெண்பா) சார்ந்தது. இதற்கு முதலடி நான்கு சீர்களும், ஈற்றடி மூன்று சீர்களும் வர வேண்டும். மற்றபடி நேரிசை, நிரையசை போன்ற அசைகளும், அவை எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கும் சில எளிய குறிப்புகள் உண்டு.
ஆனால்... இந்த இலக்கணக் குறிப்புகளை நாம் எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பில்தான் கற்போம். குறளோ மனப்பாடப்பகுதியில் ஆறாம் வகுப்புலேயே வந்துவிடும். ஆக, குழந்தைகள் பொருள் புரிந்தாலும், எவ்வாறு பிரித்து எழுதுவது என்பது தெரியாமல், உருப்போட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.
நான் என்னுடைய ஆறாம் வகுப்பின் அறிவில் எழுதுகிறேன்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்(னுடைய)
மெய்வருத்தக் கூலி தரும்.
மேற்கண்டவாறு சிறிய குழந்தை எழுதினால் என்ன தவறு?
ஆனால் அது தவறாக கருதப்பட்டு மதிப்பெண் கழிக்கப்படுவதினால் குழந்தை எவ்வாறு படிக்கிறது:
தெய்வத்தான்
தெய்வத்தான்
தெய்வத்தான்
ஆகா
ஆகா
ஆகா
தெனினும்
தெனினும்
தெனினும்
இதுவா தமிழுக்கு அழகு?
****************************************************
ரா.பாரத்ராம்.
12 Aug 2017