Monday, October 14, 2019

பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும்...




நீண்ட நாட்களுக்குப் பிறகு என் நண்பன் ஒருவனை சந்திக்க நேரிட்டது. அவன் இந்த வலைப்பதிவின் சில கதைகளை படித்ததாக சொல்லி என்னை பாராட்டினான். பிரியும் நேரத்தில் அவன் என்னிடம் கதைகளை எழுதும்போது வட்டார மொழியில் (Colloquial Language) எழுதுமாறு அறிவுரை கூறிவிட்டு சென்றான்.

நல்ல அறிவுரைதான்; அதை நான் குறை சொல்ல முடியாது. ஆனால் எனக்குள் எழுந்த எண்ணம் என்னவென்றால் - ஏன் அப்படித்தான் செய்ய வேண்டும்? சரி, அப்படியே நினைத்தாலும் என்னால் எப்படி முடியும்? நம் சிந்தனைக்குத்தான் மெல்லுவதற்கு அவல் கிடைத்தால், அசை போட நேர காலம் ஒன்றும் கிடையாதே! என் சிந்தனை அசைத்ததை கீழே தருகிறேன். 

எதனால் எனக்கு அது கடினம் என்பதை முதலில் பார்த்துவிடுவோம். என்னால் தமிழகத்தின் பல வட்டார மொழிகளில் எழுத முடியாது; ஏனென்றால் எனக்கு வட்டார மொழிகள் தெரியாது - இதற்கான குற்றத்தை என் பள்ளிக்கு சமர்ப்பிக்கின்றேன். தமிழை சொல்லிக்கொடுக்கும்பொழுதே இந்தந்த வட்டாரத்தில் இப்படி எல்லாம் பேசப்படுகின்றது என்பதையும் கற்பித்திருக்க வேண்டுமல்லவா?  என்னதான் வட்டார வட்டாரமாக சுற்றினாலும், நான் கற்றது ஒரே தமிழ்தான்.  ஒன்றே ஒன்று மீதம் உள்ளது, அதை பிறகு பார்ப்போம்.

சங்க காலத்தை விட்டு விடுவோம்; போன காலத்தை எடுத்துக் கொண்டால், அதாவது வெள்ளைக்காரன் நம் நாட்டை விட்டுப் போன காலத்தை எடுத்துக் கொண்டால், பல எழுத்தாளர்கள் தென் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். அவர்கள் பிறந்து வளர்ந்த சூழலை வைத்தும், பேசிய மொழியை வைத்தும் கதை எழுதி பிரபலமானவர்கள். சிலர் அவ்வப்பொழுது  வேறு, அல்லது சாதாரண தமிழில் எழுதினாலும் (உதாரணம்: புதுமைப்பித்தன்) பொதுவாக எல்லா சிறுகதைகளும் அவரவர் வட்டார தமிழிலேயே எழுதப்பட்டு வருகின்றன.

ஏன் அப்படித்தான் எழுத வேண்டும் என்கின்ற கேள்விக்கு வருவோம். ஒரு கிராமத்துக் கதையை எழுதும்போது அங்கு பேசப்படும் வட்டார வாக்கிலே எழுதப்பட்டால்தான் அக்கதை யதார்த்தமாகவும், உண்மையாகவும் இருக்கும் என்பது என் நண்பனின் கூற்று. இதை நிச்சயமாக யாரும் மறுக்க இயலாது. 

ஆனால் அதே சமயத்தில், ஒரு கதையின் கரு மனதில் உருவானபின், அது ஏதோ கடைக்கோடி கிரமத்தில் நடக்கும் கதையாக இருப்பின், அந்த வட்டார மொழியில்தான் எழுதவேண்டும் என்று தடை போடுவது, கற்பனையை சிறை வைத்தது போலாகிவிடும். இப்போது தமிழில் எழுதுபவர்களும், படிப்பவர்களும் குறைவு. அவர்களுக்கும் கற்பனையை வடித்துக் கொடுப்பது சரியா? 

வட்டார வாகில் இருந்தாலென்ன, இல்லாவிடில் என்ன? கற்பனையின் உருவமும், கருத்தும் நன்றாக இருக்கும்பொழுது, பள்ளியில் படித்த எழுத்து தமிழிலேயே கதைகளோ, கவிதைகளோ இருப்பதை அனுமதிக்கவேண்டும்.

சரி. ஒன்றே ஒன்று மீதம் உள்ளது என்று சொல்லியிருந்தேனல்லலவா, அதை பார்ப்போம். சென்னையிலே பிறந்து வளர்ந்ததினால் சிங்கார சென்னை தமிழ் எனக்கு ஓரளவு தெரியும். அதற்காக எனக்கு அபூர்வமாக வரும் கற்பனைகளை சென்னை தமிழில் (அதாவது மெட்ராஸ் பாஷை)  எழுத எனக்கு சங்கடமாக உள்ளது.

"இன்னாபா, நான் சொல்றது கரீக்டுதானே" 
(சீத்தலை சாத்தனார் இப்போது இல்லாதது அவரது புண்ணியமே)

இந்த வரி வரை நீங்கள் வந்திருந்தால் உங்களுக்கு தமிழில் சிறிதாவது ஆர்வமுள்ளது என நான் நம்புகிறேன். ஆதலால் இன்னமும் சற்று படிக்கவும்.

பேச்சுத்தமிழ்: நாம் சாதரணமாக பேசும்பொழுது வெகு சிறிய மாற்றம் கொண்டுவந்தாலே காதுக்கு இனிமையாக இருக்கும். உதாரணத்திற்கு,

வண்க்கம் - வணக்கம் (அழுத்திய உச்சரிப்பில்; இந்த வார்த்தை நம் எதிரிலிருப்பவர்க்கு நாம் தரும் மரியாதை)

மூல்யம் - மூலம் (இது எங்கிருந்து மாறியது எனத் தெரியவில்லை. எல்லோரும் மூல்யமாக, மூல்யமாக என்றுதான் உச்சரிக்கிறார்கள்.

மெய்யெழுத்து + இ, பல சமயங்களில் நம்மால் தவறாக உச்சரிக்கப்படுகின்றது.

க்+இ=கெ என்று உச்சரிப்பது; கெடைக்காது என்றில்லாமல், கிடைக்காது என்று சொல்வது எவ்வளவு நன்றாகவுள்ளது.

வெளையாட்டு - விளையாட்டு
நெனைச்சேன் - நினைச்சேன் (நினைத்தேன் என்பது கூட தேவையில்லை)

இப்படி பலவற்றை நம்மால் உணர முடியும். நான் தமிழ் அறிஞனுமல்ல, அப்படி ஆகவேண்டும் என்பது என் முனைப்புமல்ல. சில சில சிறிய மாற்றங்களை நாம் பேசும் உச்சரிப்பில், நாமே கொண்டுவந்தால் அது தமிழுக்கும், நம் குழந்தைகளின் உச்சரிப்பு மாற்றத்திற்கும் நம்முடைய பெரிய பங்களிப்பாகவிருக்கும்.

நன்றி.

******************************************************

ரா. பாரத்ராம்
14/10/2019